தோழமைகளுக்கு பரிசலின் வணக்கங்கள்,
வறுமையின் கோரப்பசிக்கு தங்களது கல்வியையும் அது சார்ந்த கனவுகளையும் இரையாக்கிட நேருமோ? என்ற பயத்தில் பரிதவிக்கும் மாணவ மாணவிகளை இந்த பரிசல் தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவி அவர்களை மறுகரைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கும் நிகழ்வுகள் நீங்கள் அறிந்ததே.
பூஜா என்ற கல்லூரி மாணவி செமஸ்டர் கட்டணம் கட்டுவதற்கான வழியறியாது, தனது எதிர் காலத்தின் முகத்தில் ஒரு மாபெரும் கேள்விக்குறி நிழலாய் படர்வதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த வேதனையான நிமிடங்களில், அன்புச்சகோதரர் கண்ணனின் இமாலய உதவி அந்த கேள்விக்குறியை ஆச்சர்யக்குறியாய் மாற்றியது.
பூஜாவிற்கு மட்டும் அல்ல இதே சூழ்நிலையில் இருந்த முருகன் என்ற மற்றொரு மாணவனுக்கும் சேர்த்து செமஸ்டர் கட்டணத்தை வழங்கி பரிசலுக்கு இன்ப அதிர்ச்சியையும் தீராத ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியவர் சகோதரர் கண்ணன். இவர்களுக்கான கட்டணத்தின் ரசீது இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது
மேற்சொன்ன நிகழ்வுகள் குறித்த விபரங்களை ஏற்கனவே பரிசல் சேவைக்குழுவின் முகநூல் பக்கத்தில் இணைத்திருக்கிறோம்.
https://www.facebook.com/media/set/?set=a.627469990709804.1073741831.206421929481281&type=3
இதோடு தீரவில்லை பரிசலின் கடமை. மிகவும் பலவீனமான பொருளாதார தளத்திலிருந்து கல்லூரிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் பூஜாவிற்கு, தொடர்ந்து தனது கனவுகளை நோக்கி பயணிக்க மீண்டும் பொருளாதாரம் தடையாய் நிற்கிறது, தடைகளை உடைத்தெறியும் பணியை பரிசல் மீண்டும் தொடங்கி விட்டது.
பயணியை சுமந்தபடி பரிசல் தயாராகி விட்டது. இலக்கை நோக்கிய பரிசலின் நகர்தலுக்கு, இனி துடுப்புகளாய் நீங்கள் வேண்டும். உங்களின் உதவி வேண்டும். உங்களின் பங்களிப்பு வேண்டும். நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் செயலில் இறங்கி விட்டோம்.
உங்களின் கடுகளவு பங்களிப்பும் பூஜாவின் எதிர்காலத்திற்கான ஒரு கதவை திறந்து வைக்கும்.... வாருங்கள் அணி சேர்வோம். ஆளுக்கொரு கதவை திறப்போம். அந்த சகோதரியின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.
உங்களின் உதவிக்கரம் நிச்சயம் நீளுமென்ற நம்பிக்கையை சுமந்தபடி எதிர்பார்ப்புகளுடன்.
-பரிசல் சேவை குழு-


0 Comments